தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ரஸ்ஸி வெண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஸ்ஸி வெண்டர் டுசென் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் இருந்த ரியான் ரிக்கெல்டனும் 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து அசத்தினார். 

Advertisement

தொடர்ந்து இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த ஜோபர்க் அணி பந்துவீச்சாளர் செய்வதறியாமல் திகைத்துப் போயினர். இதில் பவுண்டரி மழை பொழிந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 46 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 104 ரன்களை விளாசிய ரஸ்ஸி வேண்டர் டுசெனது விக்கெட்டை இம்ராம் தாஹிர் கைப்பற்றி இமாலய பார்ட்னர்ஷிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இதனையடுத்து களமிறங்கிய இளம் வீரர் டெவால் பிரீவிஸும் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸியின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 12 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் ரிக்கெல்டன் சதத்தை நெருங்கிய நிலையில் 49 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிச்கர்கள் என 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ஹெர்மான் 9 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்பின் களமிறங்கிய லூயிஸ் டு ப்ளூய் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய மொயீன் அலி 11 ரன்களிலும், டோனவன் ஃபெரீரா 14 ரன்களிலும் என நடையைக் கட்டினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் டு ப்ளூய் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 48 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேற, மறுபக்கம் களமிறங்கிய லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Advertisement

இதனையடுத்து அதிரடியாக விளையாட முயற்சித்த ரோமாரியோ செப்ஃபெர்ட் 3 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டவுன் அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ஒல்லி ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News