எஸ்ஏ20 2025: தூதராக தினேஷ் கார்த்திக் நியமனம்!

Updated: Mon, Aug 05 2024 22:55 IST
Image Source: Google

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.

மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.  இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றன. 

அந்தவகையில் இங்கிலாந்தின் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸின் பிராண்டன் கிங், ஆஃப்கானிஸ்ஹானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் உள்ளிட்ட வீரர்கள் தற்போது எஸ்ஏ20 அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த தொடரின் தூதராக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் நியமிக்கபட்டிருந்தார். இந்நிலையில், இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கும் இந்த தொடரின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர். இதில் தினேஷ் கார்த்திக் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வையும் அறிவித்தார். மேற்கொண்டு அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் தற்சமயம் அவர் எஸ்ஏ20 தொடரின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 257 போட்டிகளில் விளையாடி 4842 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை