ஆஸ்திரேலியா அணி சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக உணர்கிறேன் - சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் உலகில் பலரது எதிர்பார்ப்புக்கு இலக்காகி இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே துவங்க இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கு ஆஸ்திரேலியா கிளம்பியதில் இருந்து, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் உருவாக்கும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களிடமிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிப்பட ஆரம்பித்திருந்தன.
இந்த நிலையில் நேற்று நாக்பூர் மைதானத்தின் ஆடுகள புகைப்படங்கள் வெளிவந்ததில் இருந்து கடுமையான வார்த்தைகள் பெரிய குற்றச்சாட்டுகளாக மாறி ஐசிசி இதில் தலையிட வேண்டும் என்கின்ற அளவுக்கு எல்லாம் சென்றது. இன்று இதற்கு பதில் அளித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்தைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த ஐந்து நாட்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை பற்றி சிந்திப்பதே நல்லது என்று பதிலடி தந்தார்.
இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் “நீங்கள் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் எனும் பொழுது நீங்கள் உலகின் எந்த மாதிரியான ஆடுகளத்திலும் விளையாடி ஆக வேண்டும். நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பொழுது அங்கு சுழலும் விக்கெட்டுகளை எதிர்பார்க்க மாட்டோம். அங்கு பவுன்ஸ், வேகம் மற்றும் சீம் மூமென்ட் இருக்கும் ஆடுகளங்கள்தான் கிடைக்கும் என்று எங்களுக்கு தெரியும். இதே போல்தான் ஆஸ்திரேலிய அணிக்கும் இங்கு எப்படி ஆடுகளங்கள் கிடைக்கும் என்பது தெரியும்.
வெளியில் இருந்து வரும் பேச்சுகளை கண்டுகொள்ளாது இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா வீரர்கள் தயாராகி விட்டார்கள். அவர்கள் எஸ் ஜி பந்துகளில் பயிற்சி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் தங்களது சிறந்த திறன்களில் தயாராகிறது. வெளி ஆட்கள் என்ன நினைக்கிறார்களோ அதைவிட எப்பொழுதும் வித்தியாசமாகத்தான் அணிகள் இருக்கும். ஆஸ்திரேலியா அணி இங்கு விளையாடுவதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.