அறிமுக ஆட்டத்தில் சாதனைகளை குவித்த சாம் கொன்ஸ்டாஸ்!

Updated: Thu, Dec 26 2024 08:00 IST
Image Source: Google

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது அதிரடியான பேட்டிங் மூலம் வரலாறு படைத்தார். அறிமுக டெஸ்டில் விளையாடிய கான்ஸ்டாஸ், அச்சமின்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 52 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இப்போட்டியில் மொத்தமாக 64 பந்துகளை எதிர்கொண்ட கொன்ஸ்டஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். மேலும் கொன்ஸ்டாஸ் ​​இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார். இதில் பும்ராவின் 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். 

இது 3 ஆண்டுகளுக்கு பிறகு...

இதன்மூலம் 4483 பந்துகள் மற்றும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்த சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் (2018), ஆதில் ரஷித் (2018), மொயீன் அலி (2018), ஜோஸ் பட்லர் (2018), நாதன் லையன் (2020), கேமரூன் கிரீன் (2021) ஆகியோர் பும்ராவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து சாதனையை படைத்துள்ளனர்.

மேற்கொண்டு ஒரு டெஸ்டில் பும்ராவுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் சாம் கான்ஸ்டாஸ் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு பர்மிங்ஹாம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், பும்ராவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இரண்டு சிக்ஸர்களை அடித்திருந்தார். அதன்பின் தற்போது தான் பும்ராவுக்கு எதிராக ஒரு பேட்டர் ஒரு இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இளம் வயதில் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த இரண்டாவது இளம் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சாம் கொன்ஸ்டாஸ் பெற்றுள்ளார்.  இதற்கு முன் 1948 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 19 வயது 121 நாட்களில் ஹார்வி அரை சதம் அடித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது சாம் கொன்ஸ்டாஸ் 19 வயது, 85 நாள்களில் அரைசதம் கடந்து அவரது சாதனையை முறியடித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக டெஸ்டில் அரை சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை சாம் கொன்ஸ்டாஸ் பெற்றுள்ளார். முன்னதாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 1999ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்தில் 46 பந்துகளில் அரை சதமும், 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் ஆஷ்டன் அகர் 50 பந்துகளில் அரை சதமும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை