SCO vs AUS, 3rd T20I: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி!

Updated: Sat, Sep 07 2024 21:49 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - ஒல்லி ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒல்லி ஹாரிஸ் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜார்ஜ் முன்ஸி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய பிரண்டன் மெக்முல்லன் வழக்கம் போல் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால் அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 8 ரன்களுக்கும், மேத்யூ கிராஸ் 7 ரன்களுக்கும், மைக்கேல் லீஸ்க் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த பிராண்டன் மெக்முல்லன் இந்த போட்டியிலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மார்க் வாட்டும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஜேக் ஜார்விஸ் 3 ரன்களுக்கும், கிறிஸ்டோபர் சோல் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 18 ரன்களை எடுத்து மார்க் வாட்டும் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 3 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் மெக்குர்க் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் - கேமரூன் க்ரீன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் அரைசதம் கடந்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிறங்கி அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் கிரீன் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை