சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்காட்லாந்து வீரர்!
ஐசிசி நடத்தும் ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நேரடியாக தகுதிபெறாத அணிகளுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர் பிரதிக் அத்வாலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் அகில் இலியாஸ் ரன்கள் ஏதுமின்றியும், கரன் சோனவலே 3 ரன்களிலும், ஸீஸன் மக்சூத் 10 ரன்களிலும், அயான் கான், கலித் கைல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், சோயப் கான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிக் அத்வாலே 34 ரன்களுக்கு என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இதனால் ஓமன் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காட்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் சார்லி கேசெல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணியில் சார்லி டியர் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜார்ஜ் முன்ஸி 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இணைந்த பிராண்டன் மெக்முல்லன் - கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சார்லி கேசெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இப்போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடாவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 16 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்பொது ஸ்காட்லாந்தின் சார்லி கேசெல் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.