ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் தன்ஸித் ஹசன் ஷாகிப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தாலும், மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரிஷப் பந்த் 36 ரன்களையும், ஷிவம் தூபே 34 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தாலும், இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

 

அதன்படி இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 39 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி இரண்டாம் இடத்திலும், 38 விக்கெட்டுகளுடன் லசித் மலிங்கா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News