இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றது.

Advertisement

இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. 

Advertisement

அதன்பின் இணைந்த அலிக் அதானாஸ் - கேவம் ஹாட்ஜ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேவம் ஹாட்ஜ் சதமடித்து அசத்தினார். அதேசமயம் அலிக் அதானாஸ் 82 ரன்களில் ஆட்டமிழக்க, கேவம் ஹாட்ஜும் 120 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷமார் ஜோசப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷுவா டா சில்வா 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களையும் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷமார் ஜோசப் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன்படி, கட் அட்கின்ஸன் பந்துவீச்சில் ஷாமர் ஜோசப் அடித்த சிக்ஸரானது மைதானத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை உடைத்தது. இந்நிலையில் ஷமார் ஜோசப் விளாசிய இந்த அபாரமான சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News