ஷான் மசூத், அப்துல்ல ஷஃபிக் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணி கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில், அதில் பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 57 ரன்களில் அப்துல்லா ஷஃபிக் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் ஆசாமும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார்,
பின்னர் இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷான் மசூத்தும் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ரிஸ்வானும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனையடுத்து இணைந்த சௌத் ஷகீல் - சல்மான் ஆகா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்தது.
Also Read: LIVE Cricket Score
இதில் சௌத் ஷகீல் 42 ரன்களுடனும், சல்மான் ஆகா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ் மற்றும் சிமொன் ஹர்மர் தலா 2 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தான் அணி நாளைய தினம் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.