இளம் இந்திய வீரரைப் புகழ்ந்த கிளென் மெக்ராத்!

Updated: Tue, Aug 16 2022 10:03 IST
Image Source: Google

ஐபிஎல்லில் அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்தவர் உம்ரான் மாலிக். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி வீரர்களை அலறவிட்டார். தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார். 

ஐபிஎல் 15வது சீசனில் உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சீசனின் 2ஆவது அதிவேக பந்து. இறுதிப்போட்டியில் 157.3 கிமீ வேகத்தில் வீசி உம்ரான் மாலிக்கை பின்னுக்குத்தள்ளினார் நியூசிலாந்தின் லோக்கி ஃபெர்குசன். 

ஐபிஎல்லில் அதிவேகத்தில் பந்துவீசி அனைவரையும் கவர்ந்ததன் விளைவாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார் உம்ரான் மாலிக். அந்த தொடரில் வலைப்பயிற்சியில் 163.7 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசி சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அக்தர் வீசிய அதிவேக பந்தை (161.3) விட வேகமான பந்து இது. ஆனால் போட்டிக்களத்தில் வீசாமல் பயிற்சியில் வீசியதால் சர்வதேச கிரிக்கெட் சாதனையில் இடம்பெறமுடியாமல் போனது.

இந்தியாவிற்காக இதுவரை 3 டி20 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதிவேகமாக பந்துவீசி முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களை கவர்ந்துள்ளார் உம்ரான் மாலிக். குறிப்பாக நல்ல வேகத்தில் பந்துவீசும் பவுலர்களை முன்னாள் ஜாம்பவான்கள் விரும்பவே செய்வார்கள்.

அந்தவகையில் தான், உம்ரான் மாலிக் கிளென் மெக்ராத்தை கவர்ந்துள்ளார். உம்ரான் மாலிக் குறித்து பேசிய க்ளென் மெக்ராத், “உம்ரான் மாலிக்கின் பவுலிங்கை நான் அதிகமாக பார்த்ததில்லை. ஆனால் அதிவேகத்தில் வீசுவது என்னை கவர்ந்தது. நல்ல வேகத்தில் வீசுவதே தனித்துவம் தான். 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசுவதற்கெல்லாம் சொல்லிக்கொடுக்க முடியாது. 

அதுவெல்லாம் இயல்பாகவே வரவேண்டும். 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலர் எல்லாம் அரிதினும் அரிது. ஆனால் அவர் துல்லியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை