IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ஷிகர் தவான், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்திய அணிக்காக 139 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 5977 ரன்களை குவித்துள்ளார். நாளைய போட்டியில் அவர் 23 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 6000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி 136 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அடித்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 149 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதனால் தவான் இந்த போட்டியில் 23 ரன்களை எடுக்கும் பட்சத்தில் 140 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அடித்து, விராட் கோலிக்கு அடுத்து, வேகமாக 6000 ஒருநாள் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
சர்வதேச அளவில் இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா 123 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.