இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.4 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 116.3 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. 

Advertisement

இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடி 64.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 28 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. இதையடுத்து டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆட்ட நாயகனாக ஜோஷுவா ட சில்வாவும் தொடர் நாயகனாக கேப்டன் கிரேக் பிராத்வெயிட்டும் தேர்வானார்கள். 

Advertisement

கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. வெளிநாடுகளில் விளையாடிய மூன்று தொடர்களிலும் தோற்றுள்ளது (இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்). சொந்த மண்ணில் விளையாடிய இரு தொடர்களிலும் அதனால் ஜெயிக்க முடியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து 9ஆம் இடத்தில் உள்ளது. ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது. 

இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “அணியை முன்நகர்த்திச் செல்ல விரும்புகிறேன். இந்த அணி என் பின்னால் உள்ளது. நிறைய நல்ல விஷயங்களைச் செய்து வருகிறோம். அவற்றை நல்ல முடிவுகளாக நாங்கள் மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் செயல்பட்டு புதிய கேப்டனை நியமிக்குமா அல்லது ரூட்டின் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியில் அவரைத் தொடர அனுமதிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும். 

Advertisement

கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணி

  • இந்தியாவிடம் தோல்வி (1-3)
  • நியூசிலாந்திடம் தோல்வி (0-1)
  • இந்தியாவிடம் பின்தங்கியுள்ளது (1-2)
  • ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (0-4)
  • வெஸ்ட் இண்டீஸ் தோல்வி தோல்வி (0-1)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News