துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார்.
இப்போட்டியில் 22-2 என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 98 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 79 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
அதன்படி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 63 இன்னிங்ஸ்களுக்குள் அதிக 50+ ஸ்கோரை பதிவுசெய்த வீரர்கள் அடிப்படையில் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 68 ஒருநாள் போட்டிகளில் 63 இன்னிங்ஸில் 27ஆவது 50+ ஸ்கோரை பதிவுசெய்துள்ளார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தனது 63ஆவது இன்னிங்ஸின் போது 29 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்தார் என்பது குற்ப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் அதிக 50+ ஸ்கோர்கள் (63 இன்னிங்ஸ்களில்)
- 29: ஹாஷிம் ஆம்லா
- 27: ஷ்ரேயாஸ் ஐயர்
- 27: இமாம் உல் ஹக்
- 26:ஜோனதன் ட்ராட்
- 24:ஆண்ட்ரூ ஜோன்ஸ்
- 24: கோர்டன் க்ரீனிட்ஜ்
இதுதவிர்த்து ஐசிசி ஒருநாள் தொடர்களில் நம்பர் 4 அல்லது அதற்கும் குறைவாக இடத்தில் பேட்டிங் செய்யும் போது அதிக 50+ ஸ்கோர்களை அடித்த வீரர்கள் அடிப்படையில் கூட்டாக ஸ்ரெயாஸ் ஐயர் இரண்டாம் இடத்தை சமன்செய்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 7 முறை 50+ ஸ்கோரை குவித்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் 7ஆவது 50+ ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 11 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.