விராட், சச்சின் சாதனையை சமன்செய்த ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய பங்கு வகித்தார். ஏனெனில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 19 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடியதுடன் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 163.89 ஸ்ட்ரைக் ரேட்டில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தனித்துவ சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். அதன்படி ஒருநாள் போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
இதன்மூலம் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்களை சமன் செய்தார். இதற்கு முன் இவர்கள் மூவரும் தலா 4 முறை 150 ஸ்டிரைக் ரெட்டில் 50 ரன்களை கடந்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் 7 முறையும், மகேந்திர சிங் தோனி 5 முறையும் என 150+ ஸ்டிரைக் ரெட்டில் 50+ ரன்களைச் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஸ்ரெயாஸ் ஐயர் விளையாடும் திட்டம் இல்லை. ஆனால் கடைசி நேரத்தில் விராட் கோலி காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியதால் அடுத்த போட்டியிலும் அவர் நிச்சயம் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.