சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிப்பு!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இத்தொடரின் முதல் பகுதியானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணியை ஷாருக் கானும், கேரள அணியை சஞ்சு சாம்சனும் வழிநடத்தவுள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அந்தவகையில் நடப்பு சீசனுக்கான சையத்முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், அதன்பின் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வழிநடத்தியதுடன் அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்றுகொடுத்தார். இருப்பினும் அவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியவில்லை.
இந்நிலையில் நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் ஒடிசா அணிக்கு எதிராக இரட்டை சதமும், மஹாராஷ்டிரா அணிக்கு எதிராக சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதனால் இந்திய அணிக்கு திரும்பும் முயற்சியிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய ஃபார்மை கருத்தில் கொண்டு மும்பை நிர்வாகம் அவரை இத்தொடருக்கான கேப்டனாக நியமித்துள்ளது.
அதேசமயம் மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரித்வி ஷா, சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பை அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானே அணியில் சாதாரன வீரராக மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
இவர்களைத் தவிர்த்து நட்சத்திர வீரர்கள் ஷர்தூல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, அங்கிரிஷ் ரகுவன்ஷி, தனுஷ் கோட்டியான் உள்ளிட்டோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பிடிக்கவில்லை. இருப்பினும், தொடரின் முதல் சில போட்டிகளில் இடம்பிடிக்க மட்டார் என்றும், அதன்பின் அவர் மும்பை அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்டா, அஜிங்கியா ரஹானே, சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சாய்ராஜ் பாட்டீல், ஹர்திக் தாமோர், ஆகாஷ் ஆனந்த், ஷம்ஸ் முலானி, ஹிமான்ஷு சிங், தனுஷ் கோட்டியன், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் டயஸ், ஜுன்ட் கான்