இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது நேற்றைய தினம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். 

Advertisement

அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். இருப்பினும் இந்த வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அவரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

Advertisement

அதன்பின் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற அவர் தனது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்திருந்தார். அந்தவகையில் அவரை ஏலத்தில் எடுப்பதற்காக பல அணிகள் போட்டியிட்ட நிலையில், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது அவரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இதனை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் அறிவித்தார். அதன்பின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்கிலும் இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “இந்த அணி என் மீது நம்பிக்கை வைத்ததில் நான் பெருமைப்படுகிறேன். பயிற்சியாளர் பாண்டிங்குடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

திறமையான மற்றும் நிரூபிக்கப்பட்ட வீரர்களின் சிறந்த கலவையுடன் எங்களது அணி வலுவாகத் தெரிகிறது. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எங்கள் அணிக்காக முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்காக அணி நிர்வாகம் காட்டிய நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தலைமை செயல் அதிகாரி சதிஷ் மேனன் ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்தர். மேற்கொண்டு சையத் முஷ்டாக் அலி, இரானி கோப்பை தொடர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News