ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்திய நிலையில், விராட் கோலி 52 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மன் கில் தனது 7ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்திய நிலையில், அதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியின் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 2500 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாஷிம் அம்லா 51 இன்னிங்ஸ்களில் 2500 ரன்களைப் பூர்த்தி செய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஷுப்மன் கில் 50 இன்னிங்ஸ்களில் 2500 ரன்களை அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் 52 இன்னிங்ஸ்களிலும், வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 56 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல் கைல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் எடுத்த வீரர்கள்
- 50 இன்னிங்ஸ் - ஷுப்மான் கில்*
- 51 இன்னிங்ஸ் - ஹாஷிம் அம்லா
- 52 இன்னிங்ஸ் - இமாம் உல் ஹக்
- 56 இன்னிங்ஸ் - விவியன் ரிச்சர்ட்ஸ்
- 56 இன்னிங்ஸ் - ஜோனாதன் ட்ராட்
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷுப்மன் கில் அபாரமான ஃபார்மில் இருந்துள்ளார். அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் அவர் 87 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 60 ரன்களையும் அடித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சதமடித்தும் அசத்தியுள்ளார். இதன்மூலம் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் தனது அபாரமான ஃபார்மை தொடர்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.