ஐபிஎல் சீசனில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஷுப்மன் கில்!

Updated: Mon, May 19 2025 14:56 IST
Image Source: Google

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகள் 3 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 

இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மான் கில் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததுடன் நடப்பு ஐபிஎல் தொடரிலும் 600 ரன்களையும் கடந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் கேப்டனாக 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மட்டுமே இதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐபிஎல் சீசனில் 600+ ரன்கள் எடுத்த கேப்டன்கள்

  • சச்சின் டெண்டுல்கள் - 2010
  • விராட் கோலி - 2013, 2016
  • டேவிட் வார்னர் - 2016, 2017
  • கேன் வில்லியம்சன் - 2018
  • கேஎல் ராகுல் - 2020, 2021, 2022
  • ஷுப்மன் கில் - 2025

இது மட்டுமல்லாமல், ஷுப்மான் கில் டி20 வடிவத்தில் தனது 5000 ரன்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.அதேசமயம் இந்திய வீரர் கேஎல் ராகுல் 143 இன்னிங்ஸ்களில் 5ஆயிரம் ரன்களைக் கடந்து அதிவேகமாக இந்த இலக்கை எட்டிய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டி20 கிரிக்கெட்டில் அதி வேகமாக 5,000 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

  • 143 இன்னிங்ஸ் - கே.எல். ராகுல்
  • 154 இன்னிங்ஸ் – ஷுப்மான் கில்*
  • 167 இன்னிங்ஸ் - விராட் கோலி
  • 173 இன்னிங்ஸ் - சுரேஷ் ரெய்னா

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 93 ரன்களையும் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை