ஒரு தொடர் முழு அணியின் ஃபார்மையும் தீர்மானிக்காது - ஷுப்மன் கில்!

Updated: Wed, Feb 05 2025 09:10 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணி வீரர்கள் பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

முன்னதாக இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில், ஒரு தொடரில் சிறப்பாக விளையாடாததை வைத்து ஒட்டுமொத்த வீரர்களை மதிப்பிட முடியாது என்று கூறியுள்ளது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அவர், “ஒரு தொடர் முழு அணியின் ஃபார்மையும் தீர்மானிக்காது. கடந்த காலங்களில், பல்வேறு தொடர்கள் மற்றும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட பல வீரர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பும்ரா இல்லாதது எங்களுக்கு துரதிர்ஷ்டம். அவர் இருந்திருந்தால், நாங்கள் போட்டியை வென்றிருக்கலாம், தொடரை சமன் செய்திருக்கலாம். அப்போது இந்த விமர்சனங்கள் எழுந்திருக்காது. 

ஒரே ஒரு போட்டியை வைத்தும் அல்லது ஒரு நாளை வைத்தும் எந்தவொரு வீரரையும் வரையறுக்க முடியாது.ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை நாங்கள் வென்றுள்ளோம். நாங்கள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவினோம். தற்போது டி20 உலக கோப்பையை வென்று இருக்கிறோம். எனவே எங்களைப் பற்றி விமர்சிக்கும் முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை