இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்?
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியானது எதிவரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கம்பெக்கும் இத்தொடரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்தது. இதனால் ரோஹித் சர்மா எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரையிலும் இந்திய அணி கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரோஹித் சர்மாவின் வயது மற்றும் அவரது ஃபார்ம் காரணமாக அடுத்த உலகக்கோப்பை தொடரில் அவரால் விளையாட முடியுமா என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய முனைப்பில் பிசிசிஐ சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த தொடரில் இருந்து ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லை தேர்வு செய்ய பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.
முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் செயல்பட்டிருந்தார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி கவனத்தை ஈர்த்துள்ளதன் காரண்மாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியானது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
Also Read: LIVE Cricket Score
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரையில் இந்திய அணி 24 ஐசிசி போட்டிகளில் விளையாடி அதில் 23 போட்டிகளில் வெற்றியப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இதில் கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டுமே இந்திய அணி தோல்வியைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.