இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடர் தொடங்க இன்னும் 5 வார காலம் இருக்கும் நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் ஓப்பனராக சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில், அதன் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு முதல் தேர்வாக அணியில் இருந்து வருகிறார்.
ஆனால் தற்போது அவருக்கு உடலில் சில உள் காயங்கள் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து விளையாடுவது காயத்தை தீவிரப்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுப்மன் கில் இங்கிலாந்திலேயே முதற்கட்ட சிகிச்சையை எடுக்கவுள்ளதாகவும், டெஸ்ட் தொடர் தொடங்கிய பிறகு அவர் இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து சுப்மன் கில் முழுவதுமாக விலகும் சூழலில், அறிமுக வீரர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியேகியுள்ளன.