உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?

Updated: Sat, Jun 15 2024 20:12 IST
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன? (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிம் 9ஆவது சீசன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைய நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இந்திய அணி விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவுசெய்தது அடுத்த சுற்றை உறுதிசெய்துள்ளன. 

இதனையடுத்து இன்று தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் கனடா அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ள இப்போட்டியானது மோசமான வாநிலை காரணமாக தாமதமாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டிக்கு பிறகு நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஸர்வ் வீரராக சேர்க்கப்பட்டிருந்த ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இன்றைய தினம் வெளியான தகவல் ஒன்றில் ஷுப்மன் கில்லின் ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாகவே அவர் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்திய அணியுடன் அமெரிக்கா சென்றடைந்த ஷுப்மன் கில் பயிற்சி போட்டிகளில் ஈடுபடாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஷுப்மன் கில் ஹோட்டல் அறையிலேயே அதிக நேரம் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் மற்ற ரிசர்வ் வீரர்களான ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் இந்திய அணி விளையாடும் போட்டியை காண மைதானத்திற்கு நேரில் வரும் சூழலில், ஷுப்மன் கில் மட்டும் எந்த போட்டிக்கும் வராமல் இருப்பதுடன், இந்திய அணியின் பயிற்சிகளையும் தவிர்த்து வந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இதன் காரணமாகவே தற்போது அவர் இந்திய அணியிலிருந்து விடுவிடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

ஏற்கெனவே இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ-யின் பேச்சை கேட்காமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்றதன் காரணமாக மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்திய அணியிலும் இடம்பிடிக்காமல் இருந்துவரும் நிலையில், தற்போது உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்துள்ள  ஷுப்மன் கில்லும் பயிற்சிகளில் கூட பங்கேற்காமல் இருந்து தற்போது அணியிலிருந்தும் விடுவிடுக்கப்பட்டுள்ளதால், அவர் மீதும் பிசிசிஐ நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை