வங்கதேச டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி தற்மயம் இப்போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணி சென்னை வந்தடைந்ததுடன், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் வங்கதேச அணியும் இன்று இந்தியா வந்தடைவதுடன், நாளை முதல் பயிற்சியை தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பிறகு இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில்லிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அவர் இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். மேலும் அவரை அடுத்தடுத்த தொடர்களுக்கௌ தக்கவைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
ஏனெனில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் என தொடர்ச்சியாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக ஷுப்மன் கில்லை டி20 அணியில் இருந்து நீக்கி அவரது பணிச்சுமையை குறைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷுப்மன் கில் இதுவரை இந்தியாவுக்காக 21 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து இலங்கை தொடர்களுக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாகவும் அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஷுப்மன் கில் தவிர, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கும் பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்படலாம். அதேசமயம் ரிஷப் பந்தும் தற்சமயம் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளதால் அவரும் வாங்கதேச டி20 தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் எதிர்வரும் வங்கதேச டி20 தொடரில் இளம் வீரர்கள் வாய்ப்பினை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.