SA vs NED, 3rd ODI: மார்க்ரம், மகாலா அசத்தல்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Apr 02 2023 22:55 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்(8) மற்றும் டெம்பா பவுமா(6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் மாபெரும் இன்னிங்ஸை விளையாடிய மார்க்ரம் 126 பந்தில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

அவருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் அதிரடியாக பேட்டிங் செய்து 91 ரன்களை குவித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஆனால் 61 பந்தில் 91 ரன்களை குவித்தார். மார்க்ரம், டேவிட் மில்லரின் அதிரடியான பேட்டிங்கால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 370 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 21 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஓடவுட் - முசா அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஓடவுட் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இருப்பினும் மறிமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முசா அஹ்மத் அரைசதம் கடந்த கையோடு 61 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பரேஸி 29 ரன்களிலும், டாம் கூப்பர் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதையடுத்து வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியாக விளையாடி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் மகாலாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நெதர்லாந்து அணி 39.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிசாண்டா மகாலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை