டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். அந்தவகையில் குரூப் ஏ அணியில் இடம்பிடித்துள்ள நேபாள் மற்றும் கத்தார் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணியானது ஆசிஃப் ஷேக் மற்றும் திபேந்திர சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக திபேந்திர சிங் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 64 ரன்களையும், ஆசிஃப் ஷேக் 52 ரன்களையும் சேர்த்தனர். கத்தார் அணி தரப்பில் முஸாவர் ஷா, ஹிமான்ஷு ரத்தோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய கத்தார் அணியில் கேப்டன் முகமது தன்வீர் அரைசதம் கடந்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது தன்வீர் 63 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நேபாள் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் கத்தார் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் நேபாள் அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய திபேந்திர சிங் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் மற்றும் நேபாள் அணி தரப்பில் முதல் வீரர் எனும் சாதனைகளையும் திபேந்திர சிங் படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் கத்தார் அணி தரப்பில் 20ஆவது ஓவரை காம்ரன் கான் வீச, அதனை எதிர்கொண்ட திபேந்திர சிங் 6 பந்துகளிலும் சிக்ஸர் விளாசி அசத்தினார். இதற்கு முன் இந்திய அணியின் யுவராஜ் சிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கீரேன் பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.