இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது கொழும்புவில் இன்று நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். இன்றைய போட்டிக்கான இலங்கை அணி மஹீஷ் தீக்ஷ்னாவும், இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும அறிமுக வீரர் ரியான் பராக்கும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அரைசதம் கடாந்துடன், அணியின் ஸ்கோரையும் மாளமளவென உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அசத்தினர். 

பின்னர் சதத்தை நோக்கி நகர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 96 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா 10 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா ரன்கள் ஏதுமின்றியும், ஜனித் லியானகே 8 ரன்களுக்கும், கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் பேட்டிங்கில் ஜொலித்த துனித் வெல்லாலகே 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் நிதானமாக விளையாடிய குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் 59 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த கமிந்து மெண்டிஸ் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அக்ஸர், குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் தடுமாறி வந்த ஷுப்மன் கில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலியும் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ரன்களைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த விராட் கோலியும் 20 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல் 2 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும், அறிமுக வீரர் ரியான் பராக் 15 ரன்களிலும், ஷிவம் தூபே 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்ட இந்திய அணி 101 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி ஓரளவு ஆறுதலைக் கொடுத்தார். பின் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தரும் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் இந்திய அணியானது 26.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இலங்கை அணியானது 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News