நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா ஒரு ரன்னிலும், திமுத் கருணரத்னே 46 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய தினேஷ் சண்டிமால் அபாரமான் ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சர்வதேச டெஸ்ட் கிர்க்கெட்டில் தனது 16ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

பின்னர் அவரும் 116 ரன்களைச் சேர்த்த நிலையில் தினேஷ் சண்டிமாலும் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் இணையும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார்.  இதன்மூலம் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 306 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களுடன், கமிந்து மெண்டிஸ் 51 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய குசால் மெண்டிஸும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸும் தனது சதத்தை விளாசினார்.

இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமிந்து மெண்டிஸ் 16 பவுண்டரி, 4 சிக்ஸர் என 182 ரன்களையும், குசால் மெண்டிஸ் 6 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 106 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லேதம் 2 ரன்களிலும், டெவான் கன்வே 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. நியூசிலாந்து அணி தரப்பில் கேன் வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 580 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி நாளைய தினம் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News