SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் இ பிரிவுக்கான லீக் போட்டியில் மும்பை மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்ச நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மஹாராஷ்டிரா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், அர்ஷின் குல்கர்னியும் 19 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கியா ராகுல் திரிபாதி 16 ரன்களுக்கும், அங்கித் பாவ்னா 7 ரன்களுக்கும், சத்யஜீத் மற்றும் திவ்யாங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அஸிம் காஸி மற்றும் நிகில் நாயக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அஸிம் காஸி 32 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிகில் நாயக் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் மஹாராஷ்டிரா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தனுஷ் கோட்டியான் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், மொஹித் அவஸ்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின் சவாலான இலக்கை நோக்கி மும்பை வீரர்கள் பேட்டிக்கைத் தொடர்ந்தனர்.
அந்தவகையில் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில் மறுபக்கம் அதிரடியாக தொடங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 71 ரன்களுக்கும், அஜிங்கியா ரஹானே 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையிலும், மும்பை அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மஹாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய மும்பை அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.