இந்தியாவில் நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிமன்யூ சிங் 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஷஷ்வத் ராவத்துடன் இணைந்த கேப்டன் குர்னால் பாண்டியா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் குர்னால் பாண்டியா 30 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பானு பனியா 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஷஷ்வத் ராவத் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஷிவாலிக் சர்மா ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பண்டியா 5 ரன்னிலும், விஷ்னு சொலங்கி 6 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அதித் ஷெத்து அதிரடியாக விளையாடி 22 ரன்னில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவாலிக் சர்மா 36 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் பரோடா அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா மற்றும் அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட பிரித்வி ஷா 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் முதல் பந்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இனைந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடிய நிலையில் மும்பை அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அஜிங்கியா ரஹானே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய அஜிங்கியா ரஹானே 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 98 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மும்பை அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.