ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்த ஸ்நே ரானா!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் அரைசதம் கடந்ததுடன் 78 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலா 41 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 36 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் நி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் நோகுலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் தஸ்மின் பிரிட்ஸ் சதமடித்ததுடன் 109 ரன்களையும், கேப்டன் லாரா வோல்வார்ட் 43 ரன்களையும், அன்னேரி டெர்க்சன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சோபிக்க தவறினர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களிலேயே ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ரானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஸ்நே ரானா ஆட்டநயாகி விருதை வென்றதுடன், இப்போட்டியில் மூலம் வரலாற்று சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக இதற்கு முன்பு கடந்த 2005 ஆம் ஆண்டு இந்திய வீராங்கனை தீபா மராத்தே ஒரு ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில் தற்போது ஸ்நே ரானா 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீராங்கனையின் சிறந்த பந்துவீச்சு:
- 5/43 - சினேகா ராணா, கொழும்பு, 2025
- 4/1 - தீபா மராத்தே, பிரிட்டோரியா, 2005
- 4/21 - ஆஷா சோபனா, பெங்களூரு, 2024
- 4/24 - ஜூலன் கோஸ்வாமி, கிம்பர்லி, 2018
- 4/24 - பூனம் யாதவ், கிம்பர்லி, 2018