உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னேற்றம் கண்ட தென் ஆப்பிரிக்க அணி!

Updated: Thu, Oct 24 2024 12:46 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

அதன்பின் 202 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி மெஹிதி ஹசன், ஜகார் அலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 307 ரன்களைச் சேர்த்து, தென் ஆப்பிரிக்காவுக்கு 106 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், 68.06 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.

அதேசமயம் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய தென் ஆப்பிரிக்க அணியானது 47.62 புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி 6ஆம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் 4ஆம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 44.44 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கும், 43.06 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 6ஆம் இடத்திற்கும் பின் தங்கியுள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து இந்த தோல்வியின் மூலம் வங்கதேச அணியானது 30.56 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 25.93 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் எந்த இரு அணிகளும் முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டியில் மோதும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை