PAKW vs SAW, 3 T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பிற நாடுகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணிகள் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன.
அதன்படி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி மற்றும் குல் ஃபெரோஸா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபெரோஸோ 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய சித்ரா அமீனும் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலி 33 ரன்களிலும், சித்ரா அமீன் 37 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் கேப்டன் ஃபாத்திமா சனா மட்டுமே 27 ரன்களைச் சேர்த்தார்.
மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால், பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டஸ்மின் பிரிட்ஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - அன்னேக் போஷ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய போஷ் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய அன்னரி டெர்க்சன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த லாரா வோல்வார்ட் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த அன்னரி டெர்க்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய சுனே லூஸ் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னாரி டெர்க்சன் ஆட்டநாயகியாகவும், தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய சுனே லூஸ் தொடர் நாயகி விருதையும் வென்றனர்.