SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவிலும் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 22) ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
அதேசமயம் மறுபக்கம் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வெல்வதுடன், தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தும் முயற்சியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே அணியின் நட்சத்திர வீரர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது ஓட்னீல் பார்ட்மேனும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவருக்கான மாற்று வீரராக ஆல் ரவுண்டர் கார்பின் போஷ் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், குவேனா மஃபாகா, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜோர்ன் ஃபோர்டுயின், கார்பின் போஷ்.