கேப்டன்ஷிப் ரோஹித்திடம் கொடுப்பது நல்ல ஐடியா தான் - மதன் லால்!

Updated: Wed, Sep 15 2021 19:45 IST
Image Source: Google

2014ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி. அதன்பின் 2017ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாகவும் விராட் கோலி நியமிக்கப்பட்டார். 

2017 முதல் 3 விதமான இந்திய அணிகளின் கேப்டனாக இருந்துவரும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தார். இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக இந்திய அணியை வழிநடத்திவருகிறார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்ற கோலி தலைமையிலான இந்திய அணி, ஃபைனலில் தோற்று சாம்பியன்ஷிப்பை இழந்தது. 

விராட் கோலி கேப்டனாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது அவர் மீதான விமர்சனமாக உள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 ஒருநாள் உலக கோப்பை ஆகிய தொடர்களில் முறையே ஃபைனல் மற்றும் அரையிறுதியில் தோற்றது. விராட் கோலி ஐபிஎல்லிலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அதேவேளையில், ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றதுடன், 2018-இல் ஆசிய கோப்பையையும் வென்று கொடுத்தார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக வழிநடத்தி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, அவரது கேப்டன்சி திறனை நிரூபித்துள்ளார். எனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் கொடுப்பதன் மூலம் கோலி மீதான அழுத்தத்தை குறைக்கமுடியும் என்பதால், ரோஹித்தை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக்கலாம் என்ற கருத்து இருந்துவருகிறது.

விராட் கோலி ஒரு ஐசிசி கோப்பை கூட ஜெயிக்கவில்லை என்ற விமர்சனம் இருந்துவரும் நிலையில், கோலியின் பேட்டிங் ஃபார்மும் மோசமாக இருக்கிறது. எனவே இந்திய அணி மற்றும் கோலியின் நலன் கருதி கேப்டன்சியை மாற்றும் திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாகவும், இதுதொடர்பாக அண்மையில் ரோஹித் மற்றும் கோலியுடன் அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும் டி20 உலக கோப்பைக்கு பின் விராட் கோலி கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகி, அவரே கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் ஒப்படைப்பார் என்றும் ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் தகவல் வெளியானது.

ஆனால் இதுகுறித்து பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில் இந்திய அணியில் ஒருவேளை கேப்டனை மாற்றம் செய்தால், அதுவும் இந்திய அணிக்கு நல்லதே என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மதன் லால், “இந்திய அணி இப்போதிருக்கும் சூழலில், கேப்டன் மாற்றப்பட்டால் அதுவும் நல்ல ஆப்சனாகத்தான் இருக்கும். ரோஹித் சர்மாவை இந்திய அணியில் பெற்றிருப்பது பெரிய அதிர்ஷ்டம். கோலி ஒன்றிரண்டு ஃபார்மட்டுகளில் மட்டும் கவனம் செலுத்த விரும்பினால், ரோஹித் சர்மா முன்வந்து கேப்டன்சி பொறுப்பை ஏற்கலாம். அவருக்கு போதிய அனுபவம் இருக்கிறது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியிலிருந்து கோலி விலகவுள்ளதாக படித்தேன். அவர் அப்படி செய்தால் அது நல்ல ஐடியாவாகத்தான் இருக்கும். வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன் என்பது நல்ல முடிவு. ஆனால் இவையனைத்துமே கோலி என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்ததே” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை