ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயூஸ் பதோனி 55 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா ஆகியோர் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இருவரும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்ததுடன், பரபட்சம் பார்க்காமல் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது. 

Advertisement

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 89 ரன்களையும் சேர்த்தனர். மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டியதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஓவர்களுக்குள் இலக்கை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றிலும் குறைந்த ஓவர்களில் 100+ இலக்கை எட்டிய அணி எனும் சாதனையும் படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 155 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 12 ஓவர்களில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது.

மேலும் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களுக்குள் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 6 முறை பவர்பிளே ஓவர்களுக்குள் அரைசதம் கடந்து முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 3 முறை பவர்பிளே ஓவர்களுக்குள் அரைசதமடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்த மூன்று அரைதங்களையும் அவர் இந்த சீசனில் மட்டுமே அடித்துள்ளார் என்பது தனி சிறப்பு.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரே முதலிரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர். அந்தவகையில் நடப்பு சீசனில் டெல்லி அணிக்கு எதிராக இருவரும் இணைந்து 30 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை 34 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News