SL vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியின் கமில் மிஷாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கும் உதவினார்.
இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது.
இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு மருமணி அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய பிரையன் பென்னட் 13 ரன்னிலும், சீன் வில்லியம்ஸ் 23 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸாவும் 28 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மருமணி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 51 ரன்களை எடுத்த கையோடு மருமணியும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரியான் பார்ல் 26 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைக் குவித்தது. இலங்கை தரப்பில் துஷன் ஹெமந்தா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் 30 ரன்களுக்கும், பதும் நிஷங்கா 33 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கமில் மிஷாரா - குசால் பெரேரா இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கமில் மிஷாரா அரைசதமும் அடித்தார். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமில் மிஷாரா 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், குசால் பெரேரா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இலங்கை அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.