இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியானது தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனால் நியூசிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆனது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்கள் எடுத்த நிலையில் டெவான் கான்வே விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிபார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை டாம் பிளெண்டல் 47 ரன்களுடனும், கிளென் பிலீப்ஸ் 32 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பிளெண்டன் அரைசதம் கடந்த கையோடு 60 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிலீப்ஸுடன் இணைந்த மிட்செல் சான்ட்னரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். இதில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 78 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலீப்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் டிம் சௌதீவும் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மிட்செல் சாண்ட்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இறுதியில் 22 ரன்களை எடுத்த நிலையில் அஜாஸ் படேலும் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 360 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிஷான் பெய்ரிஸ் 6 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News