பார்டர் கவாஸ்கர் தொடர்: மார்க் வாக்கின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Mon, Nov 18 2024 15:54 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கும். இதற்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் ஸ்மித் 89 ரன்கள் எடுத்தால், ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மார்க் வாக்கை முந்தி ஆறாவது இடத்தை அடைவார். அதன்படி, மார்க் வாக் ஆஸ்திரேலிய அணிக்காக 372 போட்டிகளில் 445 இன்னிங்ஸ்களில் விளையாடி 16,529 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 341 போட்டிகளில் 399 இன்னிங்ஸ்களில் விளையாடி 16,441 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கை பின்னுக்கு தள்ளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஸ்மித் மற்றும் வா ஆகியோர் தலா 32 சதங்களுடன் தற்போது கூட்டாக இரண்டாவது இடத்தில் உள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரராக ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பட்டியலிலும் ஸ்டீவ் ஸ்மித் ஏழாவது இடத்தில் உள்ளார்.

ஒருவேளை இந்த தொடரில் ஸ்மித் 102 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் இந்த பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறுவார். தற்போது வரை ஸ்டீவ் ஸ்மித் 19 டெஸ்டில் 37 இன்னிங்ஸ்களில் 2,049 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு முன்னதாக ராகுல் டிராவிட் (2143 ரன்கள்), சட்டேஷ்வர் புஜாரா (2074 ரன்கள்), மைக்கேல் கிளார்க் (2049 ரன்கள்) ஆகியோர் 4, 5 மற்றும் 6ஆம் இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், நாதன் மெக்ஸ்வீனி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை