வங்கதேசத்தை வீழ்த்தி கேப்டனாக புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

Updated: Sun, Oct 13 2024 09:31 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டு தொடர்களையும் ழுவதுமாக கைப்பற்றியதுடன் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. 

அந்தவகையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணியானது சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலமும், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 75 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களையும், ரியான் பராக் 34 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து  298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது.  வங்கதேச அணியில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிடோய் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதேசமயம் லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3, மயங்க் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சனும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் வென்றனர்.

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனை ஒன்றை பதிவுசெய்துள்ளார். அதன்படி தனது தலைமையின் கீழ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியில் 100+ ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிபெற செய்த முதல் கேப்டன் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக சூர்யகுமார் தலைமையில் 2023ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர இந்த இன்னிங்ஸின் போது சூர்யகுமார் டி-20 சர்வதேசப் போட்டிகளில் தனது 2500 ரன்களையும் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி இருந்தனர். மேற்கொண்டு இந்த மைல்கல்லை எட்ட சூர்யகுமார் யாதவ் 71 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டுள்ளார். இதன்மூலம் அதிவேகமாக 2500 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக விராட் கோலி 68 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை