பட்லர், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்!

Updated: Mon, Oct 07 2024 09:34 IST
Image Source: Google

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதைல் பேட்டிங் செய்த வங்கதேச அணி மெஹ்தி ஹசன் மிராஜ் (35), நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ (27) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியானது 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில்  ஹர்திக் பாண்டியா 39 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 ரன்களையும் சேர்த்தனர். 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களை விளாசித்தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சில சாதனைகளையும் குவித்துள்ளார். 

அதன்படி, இப்போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அதன்படி ஜோஸ் பட்லர் 137 சிக்ஸர்களுடன் 4ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 139 சிக்ஸர்களை விளாசி நான்காம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 205 சிக்சர்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்தின் அதிரடி தொடகக் வீரர் மார்ட்டின் கப்தில் 176 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 144 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்

  •  205 - ரோஹித் சர்மா
  •  173 - மார்ட்டின் குப்டில்
  •  144 - நிக்கோலஸ் பூரன்
  •  139 - சூர்யகுமார் யாதவ்*
  •  137 - ஜோஸ் பட்லர்
  •  134 - கிளென் மேக்ஸ்வெல் 

இதுதவிர, இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக சுரேஷ் ரெய்னா 325 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 328 சிக்சர்களை அடித்து நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

இந்த பட்டியலில் இந்திய அணியின் அநட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாம் இடத்திலும், மகேந்திர சிங் தோனி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். மேற்கொண்டு இந்த பட்டியலில் இந்திய  அணி வீரர்கள் கேஎல் ராகுல் 311 சிக்ஸர்களுடன் 6ஆவது இடத்தையும், சஞ்சு சாம்சன் 302 சிக்ஸர்களுடன் 7ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

 டி20யில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்

  •  525 - ரோஹித் சர்மா
  •  416 - விராட் கோலி
  •  338 - எம்எஸ் தோனி
  •  328 - சூர்யகுமார் யாதவ்*
  •  325 - சுரேஷ் ரெய்னா
  •  311 - கே.எல்.ராகுல்
  •  302 - சஞ்சு சாம்சன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை