IND vs AUS: முதல் டெஸ்டிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் மோதி வரும் இந்திய அணி அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் களமிறங்கவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் தொடங்கும் இந்த தொடர் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டியது அவசியமாக உள்ளது.
ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த தொடரில் இந்தியா வெல்ல வேண்டும். மற்றொருபுறம் இந்தியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோல்வியையே கண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க காத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, எப்படியாவது இந்தியாவை தடுத்து நிறுத்த முயன்று வருகிறது.
இந்த சூழலில் தான் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக என்சிஏவுக்கு சென்ற அவர், நியூசிலாந்து தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார். எனினும் அவரின் காயம் சரியாகி முழு பிட்னஸ் பெற இன்னும் 2 வாரங்கள் தேவைப்படும் என்பதால் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2ஆவது டெஸ்டிற்கும் சேர்க்கப்படுவார்.
இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். வங்கதேச அணியுடனான தொடரில் அவரின் சராசரி 101.00 ஆகும். இதுவரை 7 டெஸ்ட்களில் விளையாடி 624 ரன்களை குவித்துள்ளார். மொத்தமாக அவரின் சராசரி 56.73 ஆக உள்ளது. இப்படிபட்ட வீரரை மிடில் ஆர்டரில் இழப்பது இந்தியாவுக்கு பின்னடைவாகும்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்புவதற்கு இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் போன்ற வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனால் இவர்களில் யாரேனும் ஒருவர் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டால், அதன்பின்னர் மற்ற போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் கேள்விக்குறியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.