அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?

Updated: Mon, Jan 08 2024 18:26 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது பீல்டிங் செய்கையில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு அந்த போட்டியின் பாதிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூரியகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவருக்கு ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் தான் தொடங்கும் என்பதனால் அதற்குள் அவர் தயாராக கால அவகாசமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை