விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. மொத்த நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகளில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 17 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங்கும் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் அகீல் ஹொசைன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் ஆகீல் ஹொசை 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் 14 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்ஃபெர்ட் 13 ரன்களிலும், அல்ஸாரி ஜோசப் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் விக்கெட்டை இழக்காமல் இருந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்  அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

அதிலும் குறிப்பாக டேரில் மிட்செல் வீசிய 19ஆவது ஓவரில் மட்டுமே 3 சிக்ஸர்களை விளாசியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அத்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்து அணிக்கு அபாரமான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் வெஸ் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ, லோக்கி ஃபெர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஆலனுடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதிரடியாக விளையாட முயற்சித்த ஃபின் ஆலன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். 

அதனைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 10 ரன்களுக்கும், டேரில் மிட்செல் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷமும் 10 ரன்களோடு விக்கெட்டை இழக்க பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி 85 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த கிளென் பிலீப்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அந்த இடத்திலேயே நியூசிலாந்து அணியின் தோல்வியும் உறுதிசெய்யப்பட்டது. 

Advertisement

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய டிம் சௌதீ மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பியதால் நியூசிலாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி ரோமாரியோ ஷெஃபெர்ட் வீசிய கடைசி ஓவரில் மிட்செல் சாண்ட்னர் மூன்று சிக்ஸர்களை விளாசினாலும், நியூசிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த நியூசிலாந்து அணியின் சூப்பர் 8 சுற்று கனவானது ஏறத்தாழ தகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News