T20 WC 2024: ரஷித் கான், ஃபசல்ஹக் ஃபரூக்கி அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் ஆபார வெற்றி!

Updated: Sat, Jun 08 2024 08:22 IST
Image Source: Google

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி காளமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய இப்ராஹிம் ஸத்ரான் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டத்தில் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் முகமது நமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த டெவான் கான்வே - கேப்டன் கேன் வில்லியம்சன் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கான்வே 8 ரன்களுக்கும், அடுத்து வந்த டேரில் மிட்செல் 5 ரன்களுக்கும் என ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அவர்களைத்தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 9 ரன்களிலும், மார்க் சாப்மேன் 4 ரன்களிலும், மைக்கேல் பிரேஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த கிளென் பிலீப்ஸும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நியூசிலாந்து அணியானது 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீசிய கேப்டன் ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் பதிவுசெய்யும் முதல் வெற்றியாகவும் இது அமைந்தது. இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் குரூப் சி புள்ளிப்பட்டியளில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை