அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

முதல் ஓவரில் இருந்தே இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் ஆஃப்கான் அணி கொடுத்த விக்கெட் வாய்ப்புகளையும் உகாண்டா அணி வீரர்கள் தவறவிட்டனர். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை விளாசியது. இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத்தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரானும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக 154 ரன்களை குவித்த நிலையில், 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களைச் சேர்த்திருந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களுக்கும், குல்பதின் நைப் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நபி 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. உகாண்டா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பிரையன் மசாபா, காஸ்மஸ் கேவூடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனைத்தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உகாண்டா அணி விளையாடவுள்ளது. 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News