T20 WC 2024: ஆஸி பேட்டர்கள் அசத்தல்; இங்கிலாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு!

Updated: Sun, Jun 09 2024 00:19 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் கடந்த போட்டியில் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய இருவரும் இன்றைய போட்டியில் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்படி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மறுபக்கம் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.  

இருப்பினும் ஆஸ்திரேலிய அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் - கிளென் மேக்ஸ்வெல் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இப்போட்டியில் பொறுப்பாக விளையாடிவந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த கிளென் மேக்ஸ்வெல்லும் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 28 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அனாலும் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பாட் கம்மின்ஸும் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ வேட் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பதிவான அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை