ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் தலிவால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஆரோன் ஜோன்ஸ் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய பர்காத் சிங் 18 ரன்களுக்கும், தில்ப்ரீத் பஜ்வா 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கனடா அணியானது 53 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத்தொடர்ந்து நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஸ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

Advertisement

இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக்கோலஸ் கிர்டன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 49 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய திலன் ஹெய்லிகர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் மொவ்வா 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணியானது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது. அயர்லாந்து அணி தரப்பில் கிரெய்க் யங் மற்றும் பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங்-ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆண்ட்ரூ பல்பிர்னி 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் 10 ரன்களோடு நடையைக் கட்டினார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி டெக்டர் 7 ரன்கள், கர்டிஸ் காம்பெர் 4 ரன்கள், கரேத் டெலானி 3 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் அயர்லாந்து அணியானது 59 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேற்கொண்டு அந்த அணி 13 ஓவர்கள் வரையிலுமே 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்த காரணத்தால் இப்போட்டியில் கனடா அணி எளிதாக வெற்றியை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் டக்ரேல் - மார்க் அதிர் இணை 15 ஓவர்கள் வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து வந்த நிலையில், அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி மீண்டும் அயர்லாந்து அணிக்கான வாய்ப்பை உருவாக்கினர். 

Advertisement

இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களில் அயர்லாந்து அணிக்கு 28 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரில் மார்க் அதிர் இரண்டு பவுண்டரிகளை அடிக்க, கடைசி ஓவரில் அயர்லாந்து அணி வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில், இன்னிங்ஸின் கடைசி ஓவரை கனடா அணி தரப்பில் ஜெர்மி கார்டன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்கள் சேர்த்திருந்த மார்க் அதிர் தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் களமிறங்கிய வீரராலும் போதிய ரன்களைச் சேர்க்க முடியவில்லை. 

இதில் கடைசி ஓவரை வீசிய ஜெர்மி கார்டன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் 4 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதனால் அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கனடா அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜெர்மி கார்டன் மற்றும் திலன் ஹெய்லிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News