அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதனையடுத்து இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அனிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த்தும் ரன்கள் ஏதுமின்றி கேஷவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனால் இந்திய அணி 34 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த அக்ஸர் படேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினார். 

Advertisement

இதில் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பாக விளையாடிய இருவரும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்து தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து இறுதியில் ஷிவம் தூபே 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேசவ் மஹாராஜ், ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்ஜோ ஜான்சென், காகிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸா ஹேன்ரிக்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியும் 12 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடியதுடன் 3ஆவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலுயன் திரும்பினார். ஆனால் மறுபக்கம் ருத்ரதாண்டவமாடிய ஹென்ரிச் கிளாசென் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்கோ ஜான்செனும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி இந்திய அணி தரப்பில் இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன் காரணமாக கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

இந்திய அணி தரப்பில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீச, அந்த ஓவரில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் தூக்கி அடிக்க, பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வியும் உறுதியானது. அதன்பின் களமிறங்கிய காகிசோ ரபாடாவும் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News