T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை?

Updated: Wed, Jun 12 2024 07:04 IST
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை? (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசிஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று அதிகாலை நடைபெற இருந்த 23ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற இவ்விரு அணிக்கும் இந்த போட்டியானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. 

அதன்படி ஃபுளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இலங்கை மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இலங்கை அணியின் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் குரூப் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், நேபாள் ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ள இலங்கை அணியானது, நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு தோல்வி, ஒரு முடிவில்லை என புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே இந்த குரூப்பில் தென் ஆப்பிரிக்க அணியானது விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இலங்கை அணி எஞ்சியுள்ள போட்டியில் வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது சாத்திய மற்றது என்றே கருதப்படுவதால், அந்த அணியின் உலகக்கோப்பை பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை