ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது நடைபெறவுள்ளது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் நடைபெற்ற இப்போட்டியின் டாஸ் நிகழ்வில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 19 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்த அக்ஸர் படேல் - ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் எடுத்திருந்த அக்ஸர் படேல் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும், ஷிவம் தூபே 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 7 ரன்கள், ரவீந்திர் ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, இறுதியில் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டாகினார். இதன்மூலம் இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News